கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களுடன் விசேட கலந்தாய்வுக் கூட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர், உறுப்பினர்களுக்கு இடையேயான விசேட கலந்தாய்வுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை கறுவாக்கேணியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்தின் கோறளைப்பற்று அரசியல் பணிமனை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்தாய்வுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் தலைமையில் முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் குழுவால் நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான சிறப்புப் பொறுப்பாளர் தி.சரவணபவனின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

இதன் போது குறித்த உள்ளூராட்சி மன்றத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள், சவால்கள் தொடர்பிலும் அவற்றைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் சபைகளின் செயற்பாடுகளை வினைத்திறனான நிலைபேண் அபிவிருத்தியை வலுவூட்டும் நோக்குடன் மேற்கொள்ள வேண்டிய வழிவகைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்குடா தொகுதி கிளைக் குழுத் தலைவருமான சீ.யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கோறளைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர், உறுப்பினர்கள், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசக் கிளைக் குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.