கோர விபத்து: தாயும், குழந்தையும் பலி!

தெஹியத்தகண்டிய பகுதியில் இன்று புதன்கிழமை பஸ்வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பொலன்னறுவை – மஹியங்கனை வீதியின் முவகம்மன பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தெஹியத்தகண்டியவிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த தனியார் பஸ்வண்டியும், அதற்கு எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் பலத்த காயமடைந்து தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, தாயும் ஒரு பிள்ளையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த தாய் 33 வயதானவர் எனவும், குழந்தை 2 வயதானவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பஸ்வண்டியின் சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.