கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வீரமணி ஐயர் நினைவரங்கம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 33 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய மகாவித்துவான் ம.த.ந. வீரமணி ஐயர் நினைவரங்கம் இன்று செவ்வாய் காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் பீடாதிபதி தவமைந்தன் றொபேட் அருட்சேகரன் கலந்து கொண்டு தமிழிசை வளர்ச்சியில் வீரமணி ஐயரின் பங்களிப்பு என்ற பொருளில் நினைவுப் பேருரை ஆற்றினார்.

வீரமணி ஐயர் பற்றிய ஆவணக் காணொளியை ஆசிரிய மாணவி கௌசிகா காட்சிப் படுத்தினார்.

நடனத்துறை விரிவுரையாளர் ரஜிதா சின்னத்துரை அதிதிக்கான அறிமுக உரையை ஆற்றினார்.

கலாசாலையில் உள்ள வீரமணி ஐயர் திருவுருவச் சிலைக்கான வழிபாடும் இடம்பெற்றது.