கோடை காலத்தில் உச்சத்திலும், குளிர் காலத்தில் குறைவாகவும் காணப்படும் ஆண்களின் விந்துத் தரம்!

ஆண்களின் விந்துத் தரம் கோடை காலத்தில் உச்சத்திலும், குளிர் காலத்தில் மிகக் குறைவாகவும் காணப்படுவதாக புதிய ஆய்வொன்று தெரிவிப்பதாக Reproductive Biology and Endocrinology சஞ்சிகை தெரிவிக்கின்றது.

பிரித்தானியா, கனடா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, டென்மார்க் மற்றும் புளோரிடாவைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுக்குட்பட்ட 15,581 ஆண்களின் விந்து மாதிரிகளை ஆய்வு செய்து இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.

விந்துத் தள்ளும் திறன் அல்லது விந்து நீந்தும் திறன் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலேயே உலகெங்கிலும் மிக அதிகமாகக் காணப்படுகிறது.

குளிர் காலமான டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விந்து நீந்தும் திறன் மிகக் குறைந்த மட்டத்தில் பதிவாகியுள்ளது.

பருவகால மாற்றங்கள் விந்து நீந்தும் திறனைப் பாதித்தாலும், விந்தணுக்களின் மொத்த எண்ணிக்கை அல்லது விந்துத் திரவத்தின் அளவு ஆகியவற்றில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

பொதுவாக விந்தணுக்கள் உற்பத்தியாவதற்கு உடல் வெப்பநிலையை விட (37°c) இரண்டு முதல் நான்கு பாகைகள் குறைவான வெப்பநிலை அவசியமாகும்.

எனினும், வருடம் முழுவதும் வெப்பமாக இருக்கும் புளோரிடாவிலும், குளிர்ச்சியான டென்மார்க்கிலும் ஒரே மாதிரியான பருவகால மாற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக Reproductive Biology and Endocrinology சஞ்சிகை தெரிவிக்கின்றது.

இந்த பருவகால மாற்றங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், பிள்ளைப் பேற்றுக்காகக் காத்திருக்கும் தம்பதிகளுக்குச் சிறந்த வழிகாட்டல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது

 

Reproductive Biology and Endocrinology சஞ்சிகை