அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சுகாதாரத்துறை செவிலியர்கள் வீடு வீடாகச் சென்று பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, மருத்துவ சேவைகளை வழக்கமாகப் பயன்படுத்தாத அமிஷ் சமூகத்தைச் சேர்ந்த மக்களைச் சென்றடைவதில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்துகிறது.
செஸ்டர் கவுண்டி சுகாதாரத் துறையைச் சேர்ந்த செவிலியர் டேல் வைசர், கிராமப்புற பகுதிகளுக்கு சுமார் 48 கிலோமீற்றர் பயணம் செய்து வீடுகளுக்கே சென்று தட்டம்மை, சளி மற்றும் ரூபெல்லா (MMR) தடுப்பூசிகளை வழங்கி வருகிறார். இதன் மூலம் மருத்துவ சேவைகளை அணுகுவதில் சிரமம் உள்ளவர்களையும் தடுப்பூசி குறித்து தயக்கம் கொண்டவர்களையும் நேரடியாகச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடிவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் இறுதியில் தட்டம்மை பரவல் தொடங்கியதிலிருந்து, பென்சில்வேனியாவில் நோய் அதிகம் காணப்படும் பகுதிகளுக்கு அருகிலுள்ள தற்காலிக மருத்துவ முகாம்களில் சுமார் 4,300 MMR தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. செஸ்டர் கவுண்டியில் மட்டும் 538 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 340 தடுப்பூசிகள் மக்களின் வீடுகளிலேயே செலுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பரவல் பென்சில்வேனியாவில் கடந்த பல தசாப்தங்களில் பதிவான மிகக் கொடிய தட்டம்மை பரவலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அதிகாரிகளின் தரவுகளின்படி, இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.










