-சுவிசிலிருந்து சண் தவராஜா-
உலகின் பல பாகங்களிலும் ஆயுத மோதல்கள் தொடர்கின்றன. மிகப்பெரும் போர்களாக அறியப்படுபவை உக்ரைனிலும், பலஸ்தீனத்திலும் தொடரும் மோதல்கள். அவை தவிர சிரியா, லிபியா, பாகிஸ்தான், காஸ்மீர், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் என உலகின் பல நாடுகளிலும் ஆயுத மோதல்கள் நாளாந்த நிகழ்வுகளாக உள்ளன. ஆபிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளும் இதில் அடக்கம். அதில் ஒன்றாக கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தொடரும் ஆயுத மோதல் உள்ளது. கனிமவளம் நிறைந்த இந்த நாட்டில் நிகழும் மோதல்கள் பல பத்தாண்டுகளாக நீடித்து வருகின்றன.
இன்றைய உலகில் அரிய வகைக் கனிமங்களுக்கான தேவை அன்றாடம் அதிகரித்துவரும் நிலையில் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மோதல்கள் நிகழ்வதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. பன்னாட்டு வணிக நிறுவனங்களின் வேட்டைக்காடாக ஆபிரிக்கா திகழ்ந்துவரும் நிலையில், கனிம வளங்களுக்காகப் போட்டிபோடும் நாடுகள் மாத்திரமன்றி, ஆயுதக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ள நிலையில் மோதல்கள் தணிவதற்கான வாய்ப்பு மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.
உலகில் அதிக வளங்களைக் கொண்ட நாடுகளாக ஆபிரிக்க நாடுகள் உள்ள போதிலும், அந்த வளங்கள் மூலம் கிட்டக்கூடிய வருவாயின் பெறுமானத்தை நுகர முடியாத மக்களாகவே ஆபிரிக்க மக்கள் நீண்ட காலமாக இருந்து வருகின்றனர் என்பது வெளிப்படை. காலனித்துவ நாடுகளால் அடிமைப்படுத்தப்பட்ட ஆபிரிக்கக் கண்டம் காலனித்துவத்தில் இருந்து பல பத்தாண்டுகளுக்கு முன்னரேயே விடுதலை பெற்ற போதிலும் இன்றும் கூட நவ காலனித்துவச் சுரண்டலுக்கு ஆளாகி வருவதைப் பார்க்க முடிகின்றது. காலனித்துவச் சுரண்டலில் இருந்து விடுதலை பெற்ற மக்கள் ஆட்சியாளர்களின் திறனற்ற ஆட்சியின் கீழ், காலனித்துவ கால கொடுமைகளை விடவும் அதிகமான கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.
காலனித்துவத்தில் இருந்து விடுதலை பெற்ற போதிலும், காலனித்துவ எஜமானர்களுக்கும், அவர்களின் எடுபிடிகளான பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கும் சேவை செய்வதையே தமது சாதனைகளாக நினைக்கும் ஆட்சியாளர்களின் போக்கு மக்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் தடையாக இருந்து வருவதைப் பார்க்க முடிகின்றது.
இடைக்காலத்தில் ‘சயர்’ என்ற பெயரில் அறியப்பட்ட கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடு. உலக நாடுகளின் வரிசையில் இது 12ஆவது பெரிய நாடாக உள்ளது. 30 யூன் 1960இல் பெல்ஜியத்திடம் இருந்து கொங்கோ விடுதலை பெற்றது. மே 22இல் நடைபெற்ற தேர்தல்களில் பற்றிஸ் லுமும்பா தலைமையிலான அணி வெற்றி பெற்றது. நாட்டின் முதலாவது தலைமை அமைச்சராக லுமும்பா பதவியேற்றார்.
சுதந்திரத்துக்கு முன்னரே ஆரம்பித்த ஆயுத மோதல்கள் இன்றுவரை நீடித்து வருகின்றன. கொங்கோ ஜனநாயகக் குடியரசின் விடுதலைக்கு சோவியத் ஒன்றியம் பெருமளவில் உதவி இருந்தது. இடதுசாரிச் சிந்தனைகளைக் கொண்டவரான லுமும்பாவை எதிர்ப்பதில் பெல்ஜியத்துடன் அமெரிக்காவும் இனைந்து கொண்டது. மறுபுறம், லுமும்பா சார்பான அணியினரை சோவியத் ஒன்றியமும், கியூபாவும் ஆதரித்து நின்றன. பனிப்போர் காலகட்டத்தில் சோவியத் ஒன்றிய அணிக்கும் அமெரிக்க அணிக்கும் இடையிலான போர்க்களமாக கொங்கோ விளங்கியது.
பற்றிஸ் லுமும்பா ஆபிரிக்காவில் மிகவும் மதிக்கப்படும் ஒரு தலைவராக இன்றும் விளங்கி வருகின்றார். ஆட்சியைப் பொறுப்பேற்று 10 வாரங்களில் 1961 யனவரி 17இல் அவரது ஆட்சிச் சகாக்களாலேயே கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட அவரின் பெயரால் ரஸ்யாவில் இன்றும் ஒரு பல்கலைக் கழகம் இயங்கி வருகின்றது.
ரஸ்யத் தலைநகர் மாஸ்கோவின் தெற்கே ‘ரஸ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக் கழகம்’ என்ற பெயரில் இது இயங்கி வருகின்றது.
கொங்கோவின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு அயல் நாடுகளான உகண்டா மற்றும் றுவண்டா ஆகியவை ஆரம்பத்தில் ஆதரவு வழங்கியிருந்தன. பின்னாளில் அந்த நாடுகளே தொல்லையாகவும் மாறியதைப் பார்க்க முடிந்தது.
90களில் கைப்பேசிகள் அறிமுகமாகிய காலகட்டத்தில் கோல்ற்றன் எனும் கனிமவளத்தின் தேவை அதிகரித்தது. இந்த அரியவகை கனிமவளம் கொங்கோவில் அதிகமாக உள்ள நிலையில் அதனைக் கைப்பற்றுவதற்கான போட்டிக் களத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் களமிறங்கின.
கூடவே, அந்த நாட்டில் செயல்பட்டு வந்த ஆயுதக் குழுக்களும் தமது பங்கிற்கு களத்தில் குதித்தன.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருந்த நாட்டின் நிலைமையை ஆயுதக் குழுக்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. இலாபம் ஒன்றையே நோக்காகக் கொண்ட வணிக நிறுனங்கள் அவர்களோடு சமரசம் செய்து கொண்டு தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டன. கனிம வள விற்பனை மூலம் கிடைத்த அதிக வருமானம் ஆயுத இயக்கங்களின் வளர்ச்சிக்கு மேலும் உதவின. மக்களிடையே நிலவிய வறுமை, ஆயுதப் படைகளின் ஊழல் போக்கு, நாட்டின் எல்லைப் பகுதிகளில் படையினரின் பிரசன்னம் இல்லாமல் போனமை ஆகிய காரணங்களை ஆயுதக் குழுக்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன.
கோல்ற்றன், கோபால்ற், ரன்ருலம், தகரம், ரங்ஸ்ரன் மற்றும் தங்கம் உள்ளிட்ட கனிம வளங்கள் கொங்கோவில் அதிக அளவில் உள்ளன. மின்சார வாகனங்களின் பாவனை உலகளாவிய அடிப்படையில் அதிகரித்து வரும் நிலையில் கனிமவளமான கோபால்ற்றின் தேவை அதிகமாக உள்ளது. உலகளாவிய அடிப்படையில் 60 விழுக்காடு கோபால்ற் கொங்கோவில் உள்ள நிலையில் அதனைக் கைப்பற்றுவதற்கான போட்டா போட்டி தொடர்ந்தும் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகின்றது.
றுவாண்டாவின் எல்லையோரமாக உள்ள கொங்கோ பகுதிகளில் எம்-23 என்ற பெயரிலான ஆயுதக் குழு செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. இந்தக் குழுவுக்கு ஆதரவாக றுவாண்டா செயற்பட்டு வருகின்றது. றுவாண்டாவில் நடைபெற்ற இன அழிப்பில் பாதிக்கப்பட்ட டுட்சி இனத் தீவிரவாதிகள் றுவாண்டாவுக்கு எதிராகச் செயற்பட்டுவரும் நிலையில், அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கொங்கோ ஜனநாயகக் குடியரசு செயற்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டும் றுவாண்டா, அந்தத் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற போர்வையில் எம்-23 தீவிரவாதிகள் செயற்பட்டுவரும் பகுதிகளுக்கு தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இடையீட்டாளராகச் செயற்படும் அமெரிக்கா அண்மையில் இரண்டு நாடுகளையும் நியூ யோர்க்கிக்கு அழைத்து ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. கொங்கோவில் உள்ள கனிம வளங்களைத் தடையின்றி பெற்றுக் கொள்ளும் நோக்குடன் மாத்திரமன்றி, கொங்கோவில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை மழுங்கடிப்பதுவும் அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது.
கனிம வளங்களைப் பெற்றுக் கொள்வதில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் ஆயுதக் குழுக்களை விலக்கி வைக்கப்பட வேண்டும் என்ற உலகளாவிய குரல்கள் அதிக கவனம் பெற்றுவரும் நிலையில் அமெரிக்கா இந்த முயற்சியை எடுத்துள்ளது. ஆனால், குறித்த ஒப்பந்தம் மூலம் இந்தப் பிராந்தியத்தில் அமைதி ஏற்படும் என்பதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்பதே யதார்த்தம். தீவிரவாதக் குழுக்களுக்கு உதவி செய்வதை பரஸ்பரம் நிறுத்திக் கொள்வதற்கு இரண்டு நாடுகளும் இணங்கினாலும் கூட, நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் மோதல்கள் முடிவுக்கு வருமா என்பது கேள்விக்குறியே. அரசாங்கங்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டாலும் கூட தீவிரவாதக் குழுக்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள முன்வருமா என்பது பிரதான கேள்வியாக உள்ளது.
அரியவகைக் கனிமச் சந்தையில் பங்காளிகளாக உள்ள தீவிரவாதக் குழுக்கள் தங்கள் தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டு இடைத் தரகர்கள் ஊடாக சந்தையைக் கைப்பற்றிக் கொண்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி உள்ளன. இலாபம் ஒன்றையே இலக்காகக் கொண்ட பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு கனிம வளங்களைக் கைப்பற்றுவது மாத்திரமே ஒரே நோக்கமாக உள்ளது. இந்தச் செயன்முறையில் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்படுவது பற்றியோ, மனித உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்படுவது பற்றியோ அவை கவலை கொள்ளப் போவதில்லை என்பது உறுதி.
மக்ளைப் பற்றிய அக்கறை இன்றிய ஆட்சியாளர்கள், மனித உரிமைகள் பற்றிய கவலை இன்றிய தீவிரவாதக் குழுக்கள், இலாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட பன்னாட்டு வணிக நிறுவனங்கள், அத்தகைய வணிக நிறுவனங்களின் பேராசைக்கு முட்டுக் கொடுக்கும் உலக அரசுகள், செவிடன் காதில் ஊதிய சங்காக விளங்கும் மனித உரிமை வாதிகளின் குரல்கள் என்பவை கொங்கோ மக்களுக்குப் பரிசளிப்பவை துயரத்தை மட்டுமே. எத்தனை ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும், உடன்பாடுகள் எட்டப்பட்டாலும் கொங்கோ மக்களின் துயரம் எதிர்காலத்திலும் நீடிக்கும் வாய்ப்பே உள்ளது என்பதே தற்போதைய கசப்பான யதார்த்தம்.