
கையிருப்பு இல்லை என பொய் சொல்லி பதுக்கி வைத்திருந்த பெட்ரோல் பறிமுதல்!
பேருவளையில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 6,400 லீற்றர் 92 ஒக்டேன் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது.
களுத்துறை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள், நேற்று புதன்கிழமை இரவு நடாத்திய சோதனை நடவடிக்கையின்போது, வாடிக்கையாளருக்கு கொடுக்காமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள், இரவு வேளைகளில் வாகனங்கள் எரிபொருள் நிரப்ப செல்லும் போது, 92 ஒக்டேன் பெட்ரோல் கையிருப்பில் இல்லை என பொய் சொல்லி, அதிக விலைக்கு யூரோ 3 பெட்ரோலை விற்பனை செய்வதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் போது, சம்பந்தப்பட்ட எரிபொருள் விநியோக நிறுவனத்தின் அதிகாரிகள், 92 ஒக்டேன் பெட்ரோல் கையிருப்பு இல்லை என கூறி, இரவில் யூரோ 3 பெட்ரோலை விற்பனை செய்யுமாறு, ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தெரியவந்தது.
பதுக்கி வைத்திருந்த பெட்ரோலை பறிமுதல் செய்த நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள், சந்தேக நபர்களுக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை, களுத்துறை நீதவான் நீதிமன்றின் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
