கையிருப்பில் தரம் குறைந்த மருந்துகள் இல்லை

அரச வைத்தியசாலைகளில் தரம் குறைந்த மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானமை என அமைச்சரவை பேச்சாளர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதற்கான ஏதுநிலைகள் இருந்த போதிலும் அவை நிவர்த்திக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் உள்நாட்டு வர்த்தகர்கள் மத்தியில் மருந்து கொள்வனவு செய்வதற்கான கட்டளைகளை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இதற்குத் தீர்வாக சுமார் 350 வகையான மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கும் உற்பத்தி செய்வதற்கும் 50 பில்லியன் ரூபாவை வழங்குவதற்குக் கடந்த வாரம் அமைச்சரவை அனுமதியளித்தது.

அத்துடன், கடந்த காலங்களில் நிலவிய முறைகேடுகள் காரணமாகவும் மருந்து கொள்வனவு நடைமுறையில் சிக்கல் நிலவியது.

தற்போது அவற்றை நிவர்த்திப்பதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஒரு சில மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

எனினும், அவற்றை உடனடியாக நிவர்த்திப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சோடியம்பைகாபனேற் என்ற மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டமையினால் மாவனெல்ல வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுவதானது உண்மைக்குப் புறம்பானதாகும்.

தற்போது சோடியம்பைகாபனேற்றுக்கான தட்டுப்பாடு முற்றிலுமாக நிவர்த்திக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பிலும் உள்ளது.

அதேநேரம், விலை மனுவுக்கு ஏற்ப விநியோகஸ்தர்கள் விநியோகத்தை மேற்கொள்ளாமையினால் இன்சுலினுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அதனை நிவர்த்திப்பதற்கும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, சில தரப்பினர் 500க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலைகளில் தரம் குறைந்த மருந்துகள் உள்ளதாகவும் கூறுவதனை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்