
கேரள கஞ்சா பொதியுடன் பெண் கைது
மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதியுடன் பெண் ஒருவர் இன்றைய தினம் புதன் கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
காட்டாஸ்பத்திரி கிராம பகுதியை சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பேசாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் காவல்துறை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் குறித்த வீட்டிற்குச் சென்று சோதனையை முன்னெடுத்தனர்.
இதன் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா பொதியில் 2 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
