கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் பிணையில் விடுதலை!
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண்ணை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில், தனது காரியாலயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அரச நிதிகளை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் அவரது வீட்டுப் பணிப்பெண் கடந்த 11 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.
