கெஹெலியவின் சொத்துக்களுக்கு தடை உத்தரவு நீடிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் என்பவற்றை இடைநிறுத்தி விதிக்கப்பட்ட உத்தரவைக் கொழும்பு மேல் நீதிமன்றம் நீடித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏலவே கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான 16 வங்கிக் கணக்குகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

அத்துடன் 97 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 ஆயுள் காப்புறுதி திட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு இன்றைய தினம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த தடையுத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.