அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள கென்னடி மையம் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டால் அது மிகப்பெரும் சோகமாக இருக்கும் என மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜான் எப். கென்னடியின் மருமகளும், ராபர்ட் எப். கென்னடியின் மகளுமான கெர்ரி கென்னடி தெரிவித்துள்ளார். கென்னடி மையத்தை இடிக்கும் சாத்தியம் தொடர்பான அச்சுறுத்தல்கள் குறித்து பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வாஷிங்டனில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான முக்கிய மையமான கென்னடி மையத்தை “இடித்துத் தரைமட்டமாக்கலாம்” என முன்னர் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றமும் தலையிட்டுள்ளது. கென்னடி மையத்தில் எந்தவொரு இடிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதற்கு குறைந்தது 30 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கென்னடி மையத்துக்கு வெளியே போராட்டங்களும் இடம்பெற்றுள்ளன. 1971ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கென்னடி மையம், இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கான அமெரிக்காவின் முக்கிய கலாசார நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
இதனிடையே, கென்னடி மையத்தின் நிர்வாகக் குழு செப்டம்பர் 15ஆம் திகதி அந்த நிறுவனத்தை காலவரையறையின்றி மூடுவதற்கு வாக்களித்திருந்தது. மையத்தின் பெயரில் ட்ரம்பின் பெயரை இணைப்பது தொடர்பான சட்டப் பிரச்சினைகளும், அதன் எதிர்கால நிதி நிலைமை குறித்த விவாதங்களும் இந்த மோதலின் முக்கிய பகுதிகளாக உள்ளன.
கென்னடி மையம் தொடர்பான இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகள், நிர்வாகத் தீர்மானங்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு இடையே தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.










