கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
பொகவந்தலாவ பொகவானை பகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயாவில் இருந்து இன்று புதன் கிழமை இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவானை தோட்ட பகுதியில் உப மின் நிலையத்தின் அருகாமையில் உள்ள ஓயாவில் சடலம் மிதந்து கொண்டிருப்பதை கால்நடைகளுக்கு உணவு சேகரிக்க சென்ற நபர் கண்ட நிலையில் உடனடியாக பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த சடலம் யாருடையதென இதுவரையிலும் அடையாளம் காணமுடியவில்லை என தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 35 மற்றும் 40 வயதுக்கிடைப்பட்டவர் எனவும் இது தற்கொலையா அல்லது கொலையா என பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
