அதிக ஊதியம், வேலைப் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட பாதுகாப்புத் தரங்களை வலியுறுத்தி, குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று 24 மணி நேர வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்ட் மற்றும் பேர்த் விமான நிலையங்களில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
குவாண்டாஸ் கிரவுண்ட் சர்வீசஸ், Australian air Express மற்றும் பிராந்திய விமான சேவையான QantasLink ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். தொழில்துறை தரத்துக்கு ஏற்ப ஊதிய உயர்வு, அதிக முழுநேர வேலைவாய்ப்புகள் மற்றும் பல்வேறு துணை நிறுவனங்களின் கீழ் பிரிக்கப்பட்டுள்ள பணிக்குழுக்களை ஒரே குவாண்டாஸ் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
சிட்னி விமான நிலையத்தில் சுமார் 400 பாதுகாப்புப் பரிசோதனை ஊழியர்களும் தனியான வேலைநிறுத்த நடவடிக்கையில் இணைந்துள்ளனர். இதனால் பயணிகள் விமான நிலையங்களுக்கு வழக்கத்தைவிட முன்னதாக வருமாறு சிட்னி விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. எனினும், வேலைநிறுத்தத்தால் குவாண்டாஸின் பயணிகள் சேவைகளில் பெரியளவிலான பாதிப்பு ஏற்படாது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.










