“குழந்தை பருவத்தில் அரண்மணையில் தனிமை வாழ்க்கை” : நேபாள நாட்டு “குமாரி”களின் கதை!

சிறிய கறையும் படியாத, தூய்மையான உடலும், உள்ளமும் கொண்ட சிறுமியரை, இறைவனின் அவதாரமாகக் கருதி வழிபடும் பாரம்பரிய வழக்கம், நேபாளத்தில் நடைமுறையில் உள்ளது.

காத்மாண்டு பள்ளத்தாக்கை பூர்வீகமாகக் கொண்ட, நியூவர் சமூகத்தின் ஷக்யா குலத்தில் பிறந்த குழந்தைகள், இவ்வாறு ‘குமாரி’ என சொல்லப்படும் வாழும் தெய்வமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

இந்த குழந்தையை அப்பகுதியில் உள்ள இந்துக்களும், பௌத்தர்களும் தெய்வமாக போற்றுவதாக சொல்லப்படுகின்றது. குமாரியின் பாதங்களை தொட்டு ஆசிர்வாதம் பெற மக்கள் வரிசையில் நிற்பார்கள்.

2 முதல் 4 வயதுக்குட்பட்ட சிறுமிகள் குமாரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் கறைபடாத தோல், முடி, கண்கள் மற்றும் பற்கள் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் இருளை கண்டு பயப்படக்கூடாது என்பதும் விதிமுறையாகும்

இவ்வாறு குமாரியாக தேர்ந்தெடுக்கப்படும் சிறுமி, மக்கள் சூழ, சிவப்பு நிற உடை அணிவிக்கப்பட்டு, பல்லக்கில் சுமந்து செல்லப்பட்டு கோயில் அரண்மனையில் தங்க வைக்கப்படுவார்.

இந்த மதிப்புமிக்க குமாரி என்ற இருக்கைக்கு, தங்கள் மகள்கள் தகுதி பெற ஷாக்யா குலத்தின் குடும்பங்கள் போட்டியிடுகின்றன, குமாரியின் குடும்பம் சமூகத்திலும், அவர்களின் சொந்த குலத்திலும் ஒரு உயர்ந்த நிலையை பெற்று காணப்படுவார்கள்.

ஆனால், குமாரிகள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள், அவர்களுக்கு விளையாட்டுகள், நண்பர்கள் என்பவை தேர்ந்தெடுக்கப்பட்டவையாக தான் இருக்கும், எல்லாவற்றையும் அவர்கள் அனுபவிக்க முடியாது.

மேலும், வருடத்தில் ஒரு சில விசேட நாட்களில் மாத்திரமே குமாரி வெளியே செல்ல அனுமதிக்கப்படுவாள்.

குமாரியாக இருக்கும் சிறுமி, பருவமடைந்ததும் அவள் குமாரி பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சாதாரண பெண்ணாக , அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுவாள். குமாரியாக தேர்ந்தெடுக்கப்படும் போது எப்படி பல்லக்கில் சுமந்து அரண்மைக்கு அழைத்து வரப்படுவாளோ, அதே போல் பல்லக்கில் சுமந்து சென்று அவளின் வீட்டில் விடுவது வழமை

குமாரியாக இருந்த சிறுமி சமூகத்தினுள் வந்த பிறகு அன்றாட வேலைகளை செய்வதிலும், பாடசாலையில் கல்வியை தொடர்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வார்கள். 2 தொடக்கம் 4 வரையான வயதிலிருந்து சுமார் 10 முதல் 12 வயது வரையான பூப்படையும் வயது வரை அவர்கள் தனித்து இருப்பதால் அன்றாட வாழ்க்கை முறையை அதன்பின் கற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

நேபாள நாட்டுப்புறக் கதைகளின்படி, முன்னாள் குமாரியை மணக்கும் ஆண்கள் இளம் வயதிலேயே இறந்துவிடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இதனால் குமாரியாக இருந்த பெண்கள் பலர் திருமணமாகாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இதேவேளை, கால ஓட்டத்தில் வாழ்க்கை முறைகள் மாறிவருகின்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, பாரம்பரியத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குமாரியாக இருக்கும் சிறுமி, பாடசாலைக்கு செல்ல முடியாவிடினும், இப்போது கோயில் அரண்மனைக்குள் தனியார் ஆசிரியர்களிடமிருந்து கல்வி கற்க அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் வெளிஉலகை கற்றுக்கொள்ள அவர்களுக்காக ஒரு தொலைக்காட்சி பெட்டி அரண்மனைக்குள் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அரசாங்கம் இப்போது ஓய்வு பெற்ற குமாரிகளுக்கு சுமார் 110 டொலர் என்ற சிறிய மாதாந்த ஓய்வூதியத்தையும் வழங்குகிறது, இது நேபாள அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை விட சற்று அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2017ல் குமாரியாக தேர்வான த்ரிஷ்ணா ஷக்யாவுக்கு தற்போது 11 வயது பூர்த்தியாகியுள்ளதால், அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அவர் தற்போது பாடசாலை கல்வியை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நேபாளத்தின் புதிய வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற 2 வயதும் 8 மாதங்களும் நிரம்பிய சிறுமி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கமைய அவர் பல்லக்கில் சுமந்து செல்லப்பட்டு, கோயில் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.