குழந்தை இயேசு சிலைக்கு கால்பந்து அணி ஜெர்சி

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விளையாட்டு உலகின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது. இந்தாண்டு உலகக் கோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 20ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய இப்போட்டிகள் டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.2022 உலகக் கோப்பையில் பிபாவின் ஐந்து கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன.

கால்பந்து போட்டி ரசிகர்கள் தங்கள் நாடு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.தங்கள் அணி விளையாடும் போட்டிகளை மைதானத்தில் சென்று பார்த்து வீரர்களுக்கு உற்சாகம் வழங்கும் நடவடிக்கையை ரசிகர்கள் ஆர்வத்துடன் மேற்கொள்வார்கள். அத்துடன் மேலும் பல தனித்துவமான செயல்களிலும் ரசிகர்கள் ஈடுபடுகின்றனர்.அப்படித்தான் மெக்சிகோ நாட்டின் ரசிகர்கள் தங்கள் அணியின் வெற்றிக்காக இறைசக்தியிடம் பிரார்த்தனை செய்யும் வழக்கத்தையும் சுமார் 50 ஆண்டுகளாக விடாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

மெக்சிகோ நாட்டில் உள்ள தேவாலயங்களில் குழந்தை இயேசுவை மக்கள் வழிபடுகின்றனர். இவரை பேபி ஜீசஸ் என்று அவர்கள் அன்புடன் அழைக்கின்றனர். இந்நிலையில், மெக்சிகோ கால்பந்து ரசிகர்கள் இந்த குழந்தை இயேசு சிலைக்கு தங்கள் அணியின் ஜெர்சியை அணிவித்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 1970ஆம் ஆண்டு மெக்சிகோ அணி உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அன்று தொடங்கி ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியின் போதும் மெக்சிகோ ரசிகர்கள் தங்கள் அணியின் வெற்றிக்காக பேபி ஜீசசை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த குழந்தை இயேசு தங்கள் அணிக்கு அற்புதத்தை நிகழ்த்தித் தருவார் என அவர்கள் நம்புகின்றனர்.இந்தாண்டு குரூப்-சியில் இடம் பெற்றுள்ள மெக்சிகோ அணி தனது முதல் போட்டியில் போலாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டி 0-0 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது