குழந்தைகளைக் கடித்துக்கொல்லும் ஓநாய்கள்
இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் பராய்ச் மாவட்டத்தில் குழந்தைகளை கடித்துக்கொன்று வரும் ஓநாய்களை கண்டதும் சுட்டுக் கொல்ல அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பராய்ச் மாவட்டத்தில் ஓநாய்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பராய்ச் நகரை சுற்றியுள்ள 35 கிராமங்களில் ஓநாய்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 45 நாட்களில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என ஒன்பது பேர் ஓநாய் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஓநாய்கள் நடமாட்டத்தை அடுத்து 35 கிராமங்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 6 ஓநாய்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு அதில் நான்கு பிடிக்கப்பட்டன. மீதமுள்ள ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்களை அச்சுறுத்தி வரும் ஓநாய்களை கண்டதும் சுட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “ஓநாய்களை நடமாட்டத்தை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அதேநேரம் அரசு நிர்வாகத்தின் காவல் துறை, வனத்துறை, வருவாய் துறை, உள்ளாட்சி அமைப்பு என அனைத்து துறையும் இதில் இணைந்து பணியாற்றி வருகின்றன” என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களை அச்சுறுத்தி வரும் ஓநாய்களை பிடிக்க உத்தரப் பிரதேச வனத்துறை ‘ஆபரேஷன் பேடியா’ என்ற பெயரில் முயற்சி மேற்கொண்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்