குழந்தைகளுக்கு உடல்ரீதியாக கொடுக்கப்படும் தண்டனைகளின் விளைவு என்ன?

உடல் ரீதியான தண்டனை, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் பாரிய அளவில் தீங்கு விளைவிப்பதாக, உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய அறிக்கை தெரிவிக்கின்றது.

உலகளவில், 0–18 வயதுடைய 1.2 பில்லியன் குழந்தைகள், ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வீடுகளில் உடல் ரீதியான தண்டனைக்கு உட்படுத்தப்படுவதாக, அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.

58 நாடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, கடந்த மாதத்தில் 17% ஆன குழந்தைகள் உடல் ரீதியான தண்டனையை (தலை, முகம் அல்லது காதுகளில் அடிக்கப்படுவது அல்லது கடுமையாக மீண்டும் மீண்டும் தாக்கப்படுவது) அனுபவித்திருப்பதாக, அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த மாதத்தில், பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களினால் உடல் ரீதியாக தண்டிக்கப்பட்ட 2–14 வயதுடைய குழந்தைகளில், உடல் ரீதியான தண்டனை விகிதங்கள்
கஜகஸ்தான் (Kazakhstan) 30%
உக்ரைன் (Ukraine) 32%
செர்பியா (Serbia) 63%
சியரா லியோன் (Sierra Leone) 64%
டோகோ (Togo) 77% ஆக பதிவாகியுள்ளது.

பாடசாலைகளிலும் குழந்தைகள் மீதாக இவ்வாறான தண்டனை பரவலாக காணப்படுகின்றது, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா முழுவதும், சுமார் 70% குழந்தைகள் தங்கள் பள்ளிப் பருவத்தில் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர். மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் இது சுமார் 25% ஆகும்.

உடல் ரீதியான தண்டனை, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பல ஆபத்துகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு இப்போது ஏராளமான அறிவியல் சான்றுகள் உள்ளன, என்று WHO சுகாதார நிர்ணயம், ஊக்குவிப்பு மற்றும் தடுப்புத் துறையின் இயக்குனர் எட்டியென் க்ரூக் (Etienne Krug) தெரிவிக்கின்றார்

“இது குழந்தைகளின் நடத்தை, வளர்ச்சி அல்லது நல்வாழ்வுக்கு எந்த நன்மையையும் அளிக்காது, மேலும் பெற்றோர்கள் அல்லது சமூகங்களுக்கும் எந்த நன்மையையும் அளிக்காது. குழந்தைகள் வீட்டிலும், பள்ளியிலும் செழித்து வளர்வதை உறுதிசெய்ய, இந்த தீங்கு விளைவிக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது”, என அவர் தெரிவித்துள்ளார்.

“குழந்தைகளின் உடல் ரீதியான தண்டனை, பொது சுகாதார தாக்கம்” என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், ஊனமுற்றவர்கள், தாங்கள் உடல் ரீதியான தண்டனையை அனுபவித்தவர்கள், போதைப்பொருள் பயன்பாடு, மனச்சோர்வு அல்லது பிற மனநல நிலைமைகளால் போராடுபவர்கள் ஆக இருப்பார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வறுமை, இனவெறி மற்றும் பாகுபாடு போன்ற பரந்த சமூக காரணிகளும் குழந்தைகள் உடல் ரீதியான தண்டனையினை அனுபவிக்க காரணமாக அமைகின்றது.

குழந்தைளுக்கு கொடுக்கப்படும் உடல் ரீதியான தண்டனை, உடனடி காயங்களுக்கு அப்பால், இது தீங்கு விளைவிக்கும் உயிரியல் எதிர்வினைகளைத் தூண்டுகிறது. இதில் அதிகரித்த மன அழுத்த ஹார்மோன் வினைத்திறன் மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மூளை அமைப்பு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

49 குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உடல் ரீதியான தண்டனைக்கு ஆளாகும் குழந்தைகள், உடல் ரீதியான தண்டனைக்கு ஆளாகாத குழந்தைகளுடன் ஒப்பிடும்போது சராசரியாக 24% குறைவான வளர்ச்சி விகிதத்தில் உள்ளதை ஆய்வு அறிக்கை காட்டுகின்றது.

இதில் குழந்தைகளின் மனநல பாதிப்பும் கடுமையானது, உடல் ரீதியான தண்டனைக்கு ஆளாகும் குழந்தைகள், பதட்டம், மனச்சோர்வு, குறைந்த சுயமரியாதை மற்றும் உணர்ச்சி உறுதியற்ற தன்மை (உணர்ச்சி உறுதியற்ற தன்மை என்பது ஒருவரின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும் ஒரு நிலை) ஆகிய அபாயங்களை எதிர்கொள்கின்றனர்.

இவை அந்த குழந்தைகள் வாலிப பருவத்தை அடையும் வரையும் தொடர்கின்றது. அதனால் வாலிப பருவத்தில் பதட்டம், மனச்சோர்வு, போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் தற்கொலை ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர்.

உடல் ரீதியான தண்டனை பரந்த சமூக விளைவுகளையும் ஏற்படுத்துகிறது, அதை அனுபவிக்கும் குழந்தைகள், ஆக்ரோஷமான நடத்தைகளை வளர்த்துக் கொள்ளவும், கல்வியில் பின்தங்கவும், வன்முறை, சமூக விரோத அல்லது குற்றவியல் நடத்தைகளில் ஈடுபடவும் தூண்டப்படுகின்றனர்.

பல நாடுகள் குழந்தைகள் மீதான உடல் ரீதியான தண்டனையை தடை செய்திருந்தாலும், அது நடைமுறையில் காணப்படாமை ஒரு கவலைக்குரிய விடயமாகும்.

இதேவேளை குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று இலங்கையின் நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது