குறைவான மாணவர்களுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை – நாலக கலுவேவா

நாட்டில் 50 க்கும் குறைவான மாணவர்களுள்ள அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கான எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என, கல்வி, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் சூழ்நிலைகளின் அடிப்படையில் தேவையான முடிவுகள் எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு கல்வி வலயத்திலும் உள்ள பாடசாலைகளை பலப்படுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத் தப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட பாடசாலைகளைப் பராமரிக்கும் போது மட்டுமே மூடுவதற்கான பரிசீலனை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதுமுள்ள 10,194 பாடசாலைகளில் மொத்தம் 1,486 பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்பதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வட மாகாணத்திலேயே இதுபோன்ற பாடசாலைகள் அதிக எண்ணிக்கையில் 275 உள்ளன.

இதைத் தொடர்ந்து மத்திய மாகாணம் (240), சப்ரகமுவ மாகாணம் (230), ஊவா மாகாணம் (158), கிழக்கு மாகாணம் (141), வடமேல் மாகாணம் (133), தென் மாகாணம் (125), வடமத்திய மாகாணம் (111) மற்றும் மேல் மாகாணம் (73) ஆகியவற்றில் குறைந்த மாணவர்கள் உள்ளனர்.

குறைந்த மாணவர்கள் உள்ள பாடசாலைகளை மூடிவிட்டு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் இலங்கை அதிபர்கள் சங்கம் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.