குருந்தூர் மலையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி இடைநிறுத்தம்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு  குருந்தூர் மலையில், அமைக்கப்பட்ட விகாரையில் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்யும் பணிகள்  ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குருந்தூர் மலைப்பகுதியில் மதம் சார்ந்த எவ்வித கட்டுமானங்களையும் மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், குறித்த தடையையும் மீறி அங்கு அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றில் புத்தர் சிலையினை நேற்று பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், வினோநோகராதலிங்கம், ஆகியோரின் பங்களிப்புடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அங்கு இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க, நிலைமையை ஆராய்ந்ததுடன், புத்தர்சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளை தொல்பொருள் திணைக்களம் முன்னெடுக்கவில்லை என  தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த வழிபாடுகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.