
குரங்குகளை எண்ண விடுமுறை தாருங்கள் – சாமர சம்பத்
நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் தோட்டங்களுக்கும் வன விலங்குகள் வருவதால் அந்த விலங்குகளைக் கணக்கெடுப்பதற்காக வன விலங்கு கணக்கெடுக்கப்படும் நாளை தினம் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை வழங்குமாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நீங்கள் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னரே தேங்காயின் விலை வரலாற்றில் முதல் தடவையாக அதிகரித்தது. அது தங்களது தவறு இல்லை. ஆனால் கொஞ்சம் ஜாதகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். சரியாக இருந்தால் எங்களுக்கு நாளை நாடாளுமன்றம் விடுமுறை வழங்க வேண்டும். நாளை குரங்குகளைக் கணக்கெடுக்க வேண்டும்.
நாம் இல்லா விட்டால் யார் எங்கள் காணிகளில் உள்ள குரங்குகளைக் கணக்கெடுப்பது? அதன் காரணமாக விலங்குகளைக் கணக்கெடுப்பதற்கு எங்களுக்கு நாளை விடுமுறை தாருங்கள்.
பெண் குரங்கு, ஆண் குரங்கு என வேறு வேறாகப் பிரித்து ஏதோ வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் கூறிய போதிலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.