குச்சவெளி கடற்பரப்பில் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு : மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து, மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குச்சவெளி பகுதியில் இன்று புதன்கிழமை காலை பொது மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குச்சவெளி கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதன்போது குச்சவெளி ஜாயாநகரைச் சேர்ந்த 23 வயதுடைய மீனவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுபோன்ற மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது, “பாமர மக்கள்மீது கடுமையான சட்டத்தை திணிக்காதே”, “தீவிரவாதிகள் இல்லை நாம் மீனவ தொழிலாளர்”, “அடிக்காதே அடிக்காதே மீனவர் வயிற்றில் அடிக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோ கங்களை ஏந்தியவாறு, மக்கள் ஈடுபட்டனர்.