கீபோர்டுகளில் எழுத்துகள் ABC வரிசையில் இல்லாமல் இருப்பதற்கான காரணம் இது தான்

நாம் தினமும் பயன்படுத்தும் கணினி அல்லது மொபைல் கீபோர்டுகளில் இடம்பெற்றுள்ள எழுத்துகள் ஏன் எளிய ABC வரிசையில் இல்லாமல், “QWERTY” என்ற வினோதமான வரிசையில் இருக்கின்றன என்று பலருக்கும் சந்தேகம் தோன்றியிருக்கும்.

இந்த லே-அவுட் சாதாரணமாக ஒன்றும் வரவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் டைப்ரைட்டர் பயன்பாட்டின்போது ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க உருவான இந்த முறை, இன்று உலகளாவிய தரநிலையாக மாறிய வித்தியாசமான வரலாற்றைக் கொண்டது.

அதாவது, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டைப்ரைட்டர் பரவலாக பயன்பட்ட காலத்தில் இந்த அமைப்பு உருவானது.

அப்போது ஒவ்வொரு எழுத்தும் உலோக கம்பியில் பொறிக்கப்பட்டு, சாவியை அழுத்தினால் மை ரிப்பன் மூலம் காகிதத்தில் அச்சாகும்.

ஆனால், வேகமாக டைப் செய்தால் அருகருகில் இருக்கும் கம்பிகள் மோதிக்கொண்டு டைப்ரைட்டர் அடைபடும் சிக்கல் ஏற்பட்டது. இதுதான் தற்போது நவீன உலகில் நடக்கிறது.

இந்த பிரச்சினையைத் தீர்க்க, அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் என்ற கண்டுபிடிப்பாளர் கீபோர்டுக்கு மறுவடிவமைப்பு கொடுத்து மாற்றினார்.

அதாவது ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் “TH,” “HE,” “IN,” “ER” போன்ற எழுத்து ஜோடிகளை தூரத்தில் வைத்தார்.

இதனால் கம்பிகள் மோதும் வாய்ப்பு குறைந்தது. இவ்வாறு உருவான லேஅவுட், மேல் வரிசையின் முதல் ஆறு எழுத்துகளால் “QWERTY” என்று அழைக்கப்பட்டது.

1870-களிலேயே டைப்ரைட்டர் நிறுவனங்கள் இந்த அமைப்பை ஏற்றுக்கொண்டதால், மக்கள் அதற்குப் பழகிவிட்டனர்.

பின்னர், எலெக்ட்ரிக் டைப்ரைட்டர்கள், கணினிகள், மொபைல் கீபோர்டுகள் என பல வந்தாலும், பழக்கத்தின் காரணமாக QWERTY கீபோர்டே உலகளாவிய தரநிலையாக மாறியது. இது, QWERTY அதிக திறமையானது என்பதற்காக அல்ல, மக்கள் அதற்குப் பழகிவிட்டதால்தான் இது உலகளாவிய தரநிலையாக மாறியது.

இன்று Dvorak, Colemak போன்ற பல மாற்று கீபோர்டு அமைப்புகள் இருந்தாலும், QWERTY இன்னமும் மிகவும் பிரபலமானதாகவே இருக்கிறது. அதன் வெற்றி தொழில்நுட்ப செயல்திறனில் மட்டும் இல்லை, மக்களின் பழக்கத்திலும்தான் உள்ளது. இவ்வாறாக, எலெக்ட்ரானிக் டைப்ரைட்டர், கணினி, மொபைல் என தொழில்நுட்பம் எவ்வளவு மாறினாலும், QWERTY லேஅவுட் மட்டும் அசைக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

மொத்தத்தில், டைப்ரைட்டர் சிக்கலுக்கான ஒரு தொழில்நுட்ப தீர்வாக தொடங்கிய QWERTY, இன்று உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் முன்னணி கீபோர்டு லேஅவுட்டாக பலருக்கும் பழக்கமாகி இருக்கிறது என்பது தான் உண்மை.