கிழக்கு மாகாணக் கல்விப் புலத்தில் நிலவும் நிர்வாகத் தாமதங்களை சீர்படுத்த இம்ரான் எம்.பி கோரிக்கை
கிழக்கு மாகாண கல்வியமைச்சு, கல்வித் திணைக்களம் மற்றும் வலயக் கல்வி அலுவலகங்களில் நிலவும் நிர்வாகத் தாமதங்களை சீர்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகணக் கல்வி அமைச்சு செயலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
ஆசிரியர்களால் அனுப்பப்படும் கடிதங்களுக்கு மாகாணக் கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்களம், வலயக் கல்வி அலுவலகங்களில் இருந்து உரிய காலத்தில் பதில் அனுப்பப்படுவதில்லை எனவும் இதனால் தாம் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகவும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது
ஆசிரியர்களது பதவி உயர்வு, பதவியில் உறுதிப்படுத்தல், வெளிநாடுகளுக்கான சமய யாத்திரை விடுமுறை, வெளிநாடுகளுக்கான சம்பளமற்ற விடுமுறை, மாகாணங்களுக்கான இடமாற்றம், ஓய்வு விண்ணப்பம் உள்ளிட்ட பல விடயங்களுக்காக ஆசிரியர்களால் முன்வைக்கப்படும் கொரிக்கைககள் வலயக் கல்வி அலுவலகங்களில் வாரக்கணக்கில் தாமதிக்கப்படுவதாகவும், அதேபோல மாகாணக் கல்வித் திணைக்களம், மாகாணக் கல்வி அமைச்சு ஆகியவற்றில் வாரக் கணக்கில் தாமதிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் உரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்றாலும் விடயத்துக்குப் பொறுப்பானவர்களால் சரியான பதில் வழங்காது அலைக்கழிக்கப் படுவதாகவும் கூறப்படுகின்றது.
எனவே, இந்த விடயங்களைக் கவனத்திற் கொண்டு கிழக்கு மாகாணக் கல்வி புலத்தில் நிலவும் இந்த நிர்வாகத் தாமதங்களை சீர்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.