கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப வளாகம் திறப்பு விழா

பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வளாகம் நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு இல: 50, மட்டக்களப்பு புதிய கல்முனை வீதியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்துவைக்கப்படவுள்ளதாக, உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.

இந் நிகழ்வினை சிறப்பிக்கு முகமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவின் பிரதித்தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சந்தன உடவத்த பிரதம விருந்தினராகவும், கௌரவ விருந்தினர்களாக உபவேந்தர் மற்றும் பணிப்பாளர்களுக்கான குழுவின் தலைவரும் ரஜரட்ட பல்கலைக்கழக உபவேந்தருமான பேராசிரியர் சஞ்சிவினி கினிகதர மற்றும் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜாவும், சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ. முரளிதரனும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இத்திறப்புவிழா குறித்து கருத்துத் தெரிவித்த உபவேந்தர், வருங்காலத்திலும் தொழில்நுட்ப வளாகத்தை விருத்தி செய்வதில் என்றும் எம்முடன் இணைந்து பாரிய பங்களிப்பினை வழங்குவார்கள் என்பது திண்ணமாகும். The Gate Institute கிழக்குப்பல்கலைகழகத்துடன் இணைந்து எமது மாகாணத்தில் தொழில் நுட்ப தொழில் புரட்சி ஒன்றினை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதை தெரிவிப்பதில் பெருமிதமடைகின்றோம்.

ஒரு பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்திற்கான பிரதான காரணியான சமூகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும், அறிவு சார்ந்த பங்களிப்பிற்கும் சேவை வழங்குகின்ற ஒரு சமூக நிறுவனமாக செயற்படுவதில் நாம் மகிழ்வடைகின்றோம். இப்புதிய முயற்சியில் பங்களிப்பு செய்யக்கூடிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூக நிறுவனங்களை எம்முடன் இணையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இத் தொழில்நுட்ப வளாகம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமைவதோடு இந்த நிறுவனமானது புதிதாக தொழில் முனைவோர்களுக்கும், புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் ஆலோசனையையும், வழிகாட்டல்களையும் வழங்குகின்ற மையமாக அமைய உள்ளது.

மேலும் இவர்களுக்கான தொழில்நுட்ப உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதோடு தொழில் முனைவோர்களுக்கான சந்தை வாய்பை பெறுவதற்கான ஆலோசனையையும், சந்தைக்கான வலையமைப்புக்களையும் ஏற்படுத்துவதற்கான ஒரு மையமாகவும் செயற்படவிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் அயராத முயற்சியின் பயனாக சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் இவ்வளாகம் திறந்து வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்