கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் “கிளீன் ஹட்டன்” பொலிவு பெற வேண்டும் – வைத்தியர் நந்தகுமார் கோரிக்கை
-மஸ்கெலியா நிருபர்-
ஹட்டன் நகர போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், ஹட்டன் நகரில் நீண்ட காலமாக நிலவி வரும் குப்பை பிரச்சினைக்கு ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் முன்னாள் தலைவரும், இந்நாள் உறுப்பினருமான வைத்தியர் அழகமுத்து நதகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர், மலையகத்தின் பிரதான நகரங்களில் ஹட்டன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். கொழும்பு, கண்டி, நுவரெலியா, பலாங்கொடை, கதிர்காமம், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு முதலான பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் புறப்படுகின்றன.
கொழும்பு, பதுளை புகையிரத சேவையும் இடம்பெற்று வருகின்றது. ஆயிரக் கணக்கான மாணவர்கள் கலவி பயிலும் பிரபல பாடசாலைகள், கல்வித் திணைக்களம், நூற்றுக் கணக்கான வர்த்தக நிலையங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், நீதி மன்றங்கள், பொலிஸ் நிலையம், மின்சார சபை, நீர் வழங்கல் சபை போன்றவற்றோடு பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வணக்கஸ்தலங்களும் காணப்படுகின்றன.
வருடத்தில் ஆறு மாதங்களுக்கு ஹட்டன் நகரின் ஊடாக சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் இடம்பெற்று வருகின்றது. வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் உட்பட இலட்சக் கணக்கான உள்ளூர் யாத்திரிகர்களும் வந்து போகின்றார்கள்.
எனவே, ஹட்டன் நகரம் அழகாகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். எனினும், நகரில் ஆங்காங்கு குப்பைகள் கொட்டப்பட்டு சிதறிக் கிடப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. காலத்துக் காலம் கழிவு முகாமைத்துத்வதை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பொருத்தமான இடத்தைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
இப்போது தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்துக்கு உட்பட்டு ஹட்டன்-டிக்கோயா நகர சபை நிர்வாகம் நடைபெற்று வருகின்றது. அதற்கு முன்னர் நகரில் சேகரிக்கப்படும் தொன் கணக்கான குப்பைகள் அனைத்தும் நகரை அண்மித்து கொழும்பு வீதியில் அமைந்துள்ள வாடி வீட்டின் வளாகத்தில் கொட்டப்பட்டு வந்தது. புதிய நகர சபை நிர்வாகம் வந்த பின்னரும் கூட இன்னமும் அதே இடத்தில தான் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
இவ்வாறு தினசரி கொட்டப்படும் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகின்றது. இந்த வீதியால் வாகனங்களில் பயணிக்கும் மக்கள் துர்நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் மூக்கைப் பொத்திக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. குப்பைகள் நிறைந்துள்ள இடத்தில் நாய்களும் பன்றிகளும் சுற்றித் திரிகின்றன. மழையும் வெயிலும் மாறி மாறி வருவதால் பூச்சிப் புழுக்கள் பெருகி, தொற்று நோய்கள் பரவக் கூடிய அச்சமும் ஏற்பட்டுள்ளது.
புதிய நகரசபை நிர்வாகம் முன்னாள் தலைவர்களையும் உறுப்பினர்களையும் திருடர்கள் என்று கூறி விமர்சனம் செய்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயற்படாமல் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்து கழிவு முகாமைத்துவத்துக்கு பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்வதில் அக்கறை காட்ட வேண்டும். கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் “கிளீன் ஹட்டன்” பிரகாசம் பெற வேண்டும் என்றார்.
