
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் வட மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கூட்டத்தில், மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இன்றைய கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகாரத்துக்கு வழங்கப்பட்ட செயற்றிட்டங்களுக்கு அனுமதி வழங்கல், மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை முன்வைத்தல் ஆகியவற்றுடன், பிரதேச மட்டத்திலான பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.
கடந்த 26.09.2023ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தின் தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களில் தடைப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக கடந்த கூட்டத்தில் கலந்துரையாடி அறிக்கைகள் பெறப்பட்டன. இன்றைய கூட்டத்தில் அவற்றை முன்னகர்த்தி செல்லும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான கடந்த கூட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இந்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் வடக்கு மாகாண சபையின் உள்ளுராட்சி அமைச்சு, விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு, மகளீர் விவகார அமைச்சு ஆகிய அமைச்சு மற்றும் திணைக்களின் செயற்றிட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
மேலும் வெளிநாட்டு நிதி மூலமான செயற்திட்டங்கள், நீர்வழங்கல் மின்சாரம், போக்குவரத்து, சமூர்த்தி, வீதி அபிவிருத்தி அதிகார சபை, கடற்றொழில் நீரியல்வள திணைக்களம், தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அனுமதிக்காக 2023ம் ஆண்டின் புதிய திட்டங்களான பூநகரிக்குள சூரியகல மின் உற்பத்தி செயற்திட்டம்(United Solar Energy), பிராந்திய உள்ளராட்சி உதவி ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளுர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் (LDSP) கீழான வேலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இன்றைய தின அபிவிருத்தி குழு கூட்டத்தின் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது இதற்கு அமைவாக இனி வரும் காலங்களில் கிளிநொச்சி நகர பகுதியை அண்டிய பகுதிகளுக்கு இரணைமடுசந்தியிலிருந்து பரந்தன் பகுதிக்கும் பரந்தன் பகுதியில் இருந்தும்இரணைமடுசந்திக்கும் கனரக வாகனங்கள் காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை பாடசாலை நாட்களில் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதையும் அத்துடன் அதேசமயம் பாடசாலை முடிவடையும் நேரங்களில் ஒரு மணி தொடக்கம் இரண்டு மணி வரையும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதையும் அத்துடன் பாடசாலை ஆரம்பிக்கப்படும் நேரம் காலை7.00 மணிதொடக்கம் 8.00 மணிவரை எந்தஒரு வாகனங்களும் 40km மீற்றர் வேகத்தினை பயன்படுத்தவேண்டும் எனவும் அதேபோன்று பாடசாலைமுடிவுறும் நேரம் 1.00 மணிதொடக்கம் 2.00 மணிவடை இந்த நடைமுரை அமுலில் இருக்கும் என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

