கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதலாவது வைத்தியர் மற்றும் பொறியியலாளர்கள் கௌரவிப்பு!

 

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதலாவது வைத்தியர் மற்றும் பொறியியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கணித விஞ்ஞான பிரிவு உருவாக்கப்பட்ட முதல் ஆண்டில் தெரிவாகிய வைத்தியர் மற்றும் பொறியியலாளர்களாக வெளியேறியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை ஒன்றுகூடலில் இடம்பெற்றது.

2013ம் ஆண்டு கணித விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 2015ம் ஆண்டு பரீட்சையில் தோற்றி திறமை சித்தி மூலம் 60 மாணவர்கள் அப்பாடசாலையிலிருந்து சென்றுள்ளார்கள்.

அவ்வாண்டில் முதன்மை பெறுபேறுகளை பெற்ற கர்சிகா யசோதரன் என்ற மாணவி மகாவித்தியாலயத்திலிருந்து தெரிவான முதலாவது மருத்துவராவார்.

மேலும்,  இராசேந்திரன் மதுசனன், முத்தையா ருசாந்தன் ஆகிய இருவரும் அப்பாடசாலையிலிருந்து தெரிவான முதலாவது பொறியியலாளர்களாவர்.

இவர்கள் பட்டப்படிப்பினை முடித்து பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை மாணவர் ஒன்றுகூடலில் பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அவர்களிற்கான நினைவு சின்னங்கள் பாடசாலை முதல்வரினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாடசாலை முதல்வர்,  ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். வைத்தியரான கர்சிகா யசோதரன் மாணவர்களை ஊக்குவிக்கும் கருத்துக்களை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்