கிளிநொச்சியில் விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியம் – 2025 (PSDG) கீழ் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடு வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.சோதிலட்சுமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

உள்ளூர் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதன் ஊடாக அவர்களது உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் குறித்த உபகரணங்கள் மற்றும் உள்ளீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வருடம் வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் 99.9 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் கீழ் வருகின்ற திட்டங்கள் மற்றும் இன்றுநடைமுறைப்படுத்தப்படும் இத் திட்டத்தின் நோக்கங்களையும் எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண பணிப்பாளர் கருத்துத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண மேலதிக விவசாயப் பணிப்பாளர் தெய்வேந்திரம், வடக்கு மாகாண விவசாயத் திணைக்கள கணக்காளர் பிரதீபன், விதை மற்றும் ஆராய்ச்சி பிரிவு உத்தியோகத்தர்கள், பண்ணை உத்தியோகத்தர்கள், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.