கிளிநொச்சியில் விதை பந்து திருவிழா!
2025ஆம் ஆண்டுக்கான விதைப்பந்து திருவிழாவின் இறுதி மற்றும் பிரதான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி அக்கராயன் ஒதுக்கப்பட்ட காட்டில் விதைப்பந்துகள் வீசப்பட்டன.
ஓராயம் அமைப்பின் அனுசரணையுடன் கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயத்தினால் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டு, 5 பாடசாலைகள் இணைத்து மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதைப்பந்துகள் அக்கராயன் காட்டுக்குள் மாணவர்களும் ஆசிரியர்களாலும் அதிகாரிகளாலும் வீசப்பட்டன
இன்று உலகம் எதிர் கொள்கின்ற மிக ஆபத்தான பிரச்சினையாக காலநிலை மாற்றம் காணப்படுகிறது. காடு அழிப்பு உட்பட எமது சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புக்களின் விளைவாக காலநிலை மாற்றம் நிலவுகிறது.
எனவே, எமது சூழலை பாதுகாத்து, அடுத்த சந்ததியினருக்கு கொடுப்பதற்காகவும் மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நிகழ்வு நடைபெற்றது.
விதைப்பந்து வீசும் செயற்பாட்டில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ் அகமட், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் சி. லதீஸ்குமார், வன பாதுகாப்பு திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் வன விரிவாக்க உத்தியோகத்தர், பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் இணைந்து கொண்டனர்