கிளிநொச்சியில் இருதரப்பினருக்கு இடையில் மோதல்: ஐவர் காயம்

கிளிநொச்சி – ராமநாதபுரம் பகுதியில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த 28 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களே இதன் போது காயமடைந்துள்ளனர்.

தனிப்பட்ட முரண்பாடு ஒன்று காரணமாக, ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில், ஆயுதம் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த மோதலில் இரண்டு ஆண்களும், 3 பெண்களும் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இரண்டு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 24, 33 மற்றும் 59 வயதுகளையுடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.