கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலி – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்
-யாழ் நிருபர்-
கிளிநொச்சி நகரில் இன்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பெற்றோருடன் பயணித்த குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் ஏனையோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏ9 வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியதுடன், விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100 மீற்றர் பாதையை விட்டு விலகி பயணித்துள்ளது.
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை ரிப்பர் வாகனம் குறிப்பிட்ட அளவு தூரம் இழுத்து சென்றுள்ளது.
குறித்த ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்ற மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் வாகன சாரதியை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுடைய குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த 6வயது குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றது.
சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்