கிருஷ்ண ஜெயந்தி 2024
🟦கிருஷ்ணரின் பிறந்தநாள் இந்தியாவில் எப்போதும் மிக பிரசித்தியாக கொண்டாடுவது வழக்கம். மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணர் அவதாரமாகும். தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.
🟦கிருஷ்ணர் அவதரித்தது ஆவணி மாதம், ரோகிணி நட்சத்திரம், தேய்பிறை அஷ்டமி திதியில் என புராணங்கள் சொல்கின்றன. அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டவே பகவான் கிருஷ்ணர், அவதாரம் எடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த பண்டிகை ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். கிருஷ்ணர் அவதரித்தது இரவு நேரத்தில் என்பதால் மாலை நேரத்திலேயே கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகள் செய்யப்பட வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி 2024 எப்போது?
💦இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26ஆம் திகதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 09.13 மணி தொடங்கி, ஆகஸ்ட் 27ஆம் திகதி காலை 07.30 வரை அஷ்டமி திதி உள்ளது. அதே சமயம், ஆகஸ்ட் 26ஆம் திகதி இரவு 09.41 மணிக்கே ரோகிணி நட்சத்திரம் தொடங்குகிறது. ஆகஸ்ட் 27ஆம் திகதி இரவு 08.54 மணி வரை ரோகிணி நட்சத்திரம். இருந்தாலும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் இரவு நேரமே கிருஷ்ணர் அவதரித்த நாளாக கருதப்படுவதால் ஆகஸ்ட் 26ஆம் திகதி மாலையே கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகளை செய்ய வேண்டும்.
வழிபடும் முறைகள்
💦இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருத்திகையும் சேர்ந்து வருகிறது. அதனால் முருகப் பெருமானையும் சேர்த்தே வழிபடுவதால் நிச்சயம் குழந்தை பேறு கிடைக்கும். கிருஷ்ணர் சிலை அல்லது படத்தை வீட்டில் அலங்கரித்து, பூக்கள், மாலைகள், தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம்.
💦இதனால் கவலைகள் அனைத்தும் நீங்கும். அன்றைய தினம் வீட்டில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கும், குழந்தைகளுக்கும் கிருஷ்ணரை போல் நன்றாக அலங்காரம் செய்து, கிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமான பலகாரங்களை படைத்து வழிபட வேண்டும். வீடு முழுவதும் பாதம் போட்டு, கிருஷ்ணரை வீட்டிற்கு அழைத்தும் வழிபடலாம். கிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமான வெண்ணெய் படைத்து அன்றைய நாளில் வழிபடுவது சிறப்பு.
நிவேதனம்
💦கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல், பால், வெண்ணெய், பழங்கள், இனிப்புகள் போன்றவை படைக்கப்படுகின்றன.
பலன்கள்
💦கிருஷ்ணர், மகிழ்ச்சி மற்றும் அன்பிற்குரிய கடவுளாக கருதப்படுகிறார். அதனால் இவரை வழிபட்டால் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை மனதார வழிபட்டால் வெற்றி, அனைத்து விதமான நன்மைகள் ஆகியவற்றை பெறுவதுடன், இறுதியில் மோட்சத்தையும் அடைய முடியும் என்பது நம்பிக்கை. குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் கிருஷ்ணரை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கிருஷ்ண ஜெயந்தி 2024
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்