கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை: தம்புள்ளை தண்டர்ஸ் உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை!

 

இலங்கையின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணயச் சூழ்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமிம் ரஹ்மானுக்கு (Tamim Rahman) கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தண்டனை வழங்கியது.

பங்களாதேஷில் பிறந்த பிரித்தானியப் பிரஜையான தமிம் ரஹ்மான், வீரர் ஒருவரை ஆட்ட நிர்ணயத்திற்குத் தூண்டியமை மற்றும் சூதாட்டத்தை ஏற்பாடு செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இதன்படி அவருக்கு 4 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அது 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 24 மில்லியன் ரூபாய் (சுமார் 80,000 அமெரிக்க டாலர்) அபராதம் விதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு இலங்கையில் விளையாட்டுத் துறையில் ஊழலைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட கடுமையான சட்டத்தின் கீழ் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.