கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண்

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து இன்று சனிக்கிழமை காலை இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் டெனிஸ்ரன் கீர்த்தனா (வயது – 29) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் குழந்தை பிரசவித்த நிலையில் கடந்த 11 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய அவர் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டார் மற்றும் அயலவர்கள் கிராமத்தவர்கள் இணைந்து தேடுதல் நடத்தியும் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்று காலை 8 மணியளவில் வீட்டு கிணற்றுக்குள் இருந்து சடலமாக இருப்பதனை அவதானித்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதி விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.