காஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை : 4 பேர் கைது

காஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களைக் கடத்தப் பயன்படுத்திய ஜீப் வண்டியும் மீட்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆம் திகதி இரவு, காஹவத்தை, புங்கிரியா, பலன்சூரியகம பகுதியில் உள்ள வீட்டில் இரண்டு சகோதரர்களுடன் மற்றொரு இளைஞரும் உரையாடி கொண்டிருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு சகோதரர்களில் ஒருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், ஏனைய இருவருக்கும் கைவிலங்கிட்டு, பொலிஸார் என்று கூறிக்கொண்ட சந்தேக நபர்கள் அவர்களை கடத்திச் சென்றுள்ளனர்.

அதில் ஒரு இளைஞரை சந்தேக நபர்கள், முழந்தாளிட வைத்து சுட்டுக் கொன்றதுடன், மற்றொரு இளைஞர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் டுபாயில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹோமாகம ஹந்தயா என்ற தனுஜ சம்பத்தின் நெருங்கிய கூட்டாளிகள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போதைப்பொருள் வர்த்தகம் குறித்த தகவல்களை குறித்த இளைஞர் வழங்குவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து இந்த குற்றம் நடந்ததுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கொல்லப்பட்ட நபர் காஹவத்தை, பலன்சூரியகம பகுதியைச் சேர்ந்த தேஷான் எரந்த (வயது 22) என்ற இளைஞர் ஆவார்.

சந்தேக நபர்களுடன் அன்றைய தினம் இளைஞர்களைக் கடத்தப் பயன்படுத்திய ஜீப் வண்டி, ஒரு கார், 3 மோட்டார் சைக்கிள்கள், 2 பதிவு செய்யப்பட்ட வாகன இலக்கத் தகடுகள், 197 கிராம் ஹெரோயின் மற்றும் 96 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவையும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இளைஞர்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட ஜீப் வண்டி மீகொடை பொலிஸ் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வேலையற்ற 27 முதல் 29 வயதுக்குட்பட்ட ஹோமாகம மற்றும் பாதுக்கை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

‘ஹந்தயா’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் போதைப்பொருள் கடத்தலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

கொலையில் நேரடியாக ஈடுபட்ட நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.