காஷ்மீர் தாக்குதலில் முடிவடைந்த திருமண பந்தம்: அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய புகைப்படம்
ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தற்போது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த தாக்குதலில் நடந்த மற்றுமொரு துயர் சம்பவம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
திருமணம் முடிந்து ஆறு நாட்களேயான கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவமே பலரையும் துயரத்தில் மூழ்கடித்துள்ளது.
இந்தியக் கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் வினய் நர்வால் (வயது – 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த கடற்படை அதிகாரி அண்மையில் திருமணம் செய்திருந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு அவரது மனைவியுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
இந்நிலையிலேயே நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிர் இழந்துள்ளார்.
இதனிடையே இவரது இழப்பு அனைத்து கடற்படை வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அவரது மனைவி தெரிவிக்கையில், “நான் கணவருடன் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, துப்பாக்கி ஏந்தியவர்கள் அந்தப் பகுதிக்கு வந்தனர். அவர்கள் என் கணவரின் பெயரைக் கேட்டு, முஸ்லிம் இல்லை என்று தெரிந்தவுடன் அவரைச் சுட்டுக் கொன்றனர்.” என உருக்கமாக தெரிவித்தார்.
மேலும் அவரது கணவர் உயிரிழந்த நிலையில் செய்வதறியாது திகைத்த வண்ணம் இருக்கும் மனைவியின் புகைப்படம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்