காரில் மனைவி மற்றும் குழந்தையுடன் பயணித்த இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை!

மீகொடை – நாகஹவத்தை பகுதியில் காரில் பயணித்த இளம் குடும்பஸ்தர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீகொட – நாகஹவத்த பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய  இளம் குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன், நேற்று சனிக்கிழமை இரவு மூத்த சகோதரர் வீட்டுக்குச் சென்று, மீண்டும் காரில் வீடு திரும்பியுள்ளார்.

அதன்போது, வீதியோரம் மறைந்திருந்த இருவர், வாகனத்தை இடைமறித்துத் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுஇ தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு ரீ 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.