காரால் மோதி ஒருவரை கொலைசெய்த பொறியியலாளர்

தெஹிவளை – கடவத்தை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை காரினால் மோதி விபத்துக்குள்ளாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவை அல்விஸ் பெரேரா மாவத்தையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடையவரே இதன் போது உயிரிழந்துள்ளார்.

இவர் செலுத்திய மோட்டார் சைக்கிளானது கார் ஒன்றின் மீது மோதியதில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த காரின் சாரதி மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி விபத்துக்குள்ளாக்கியதில்மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சந்தேக நபரான காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பொறியியலாளராவார்.