
கானாவில் 2 மில்லியன் டொலர் தங்க மோசடியில் சிக்கிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்?
தங்க வியாபாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக, கானா நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பதிவிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த தகவல்களை முற்றிலும் மறுப்பதாகவும், அதில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில்,
உண்மையில், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவை சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே சிலர் ஏமாற்ற முனைந்ததை அறிந்து உடனடியாக, இந்த ஏமாற்று நடவடிக்கை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஏமாற்ற முனைந்த 11 பேரையும் பொலிசார் கைது செய்தார்கள்.
இதனைத்தவிர, கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசியல் நோக்கங்களுக்காகச் சில தகவல்கள் தவறாகவும், பிழையாகவும் பரப்பப்படுவதையிட்டு நாம் மிகுந்த வருத்தம் அடைகிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி
போலி தங்க ஒப்பந்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வை ஏமாற்றி 2 மில்லியன் டொலர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு அக்ராவில் உள்ள நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாக கானா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட அப்துல் ரவூப் ஆடம், அல்ஹ்மமூதி சலே, யாவ் அத்தா அன்ட்வி, ஒஸ்மான் சுலேமான், நைராபா த்வாமேனா ரா, பென்ஸ்கார்ல் த்வாமேனா, சன்ஃபோ முபாசிர், சல்லா மம்மூதி, அகமது இஸ்ஸா, உமாரு பஃபாடெனம் மற்றும் சாலிஃபு சுலேமான் ஆகியோர் தலா 500,000 கானா செடிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வை, அதிக அளவில் தங்கத்தை வழங்க முடியும் என்று கூறி, சந்தேக நபர்கள் 2023 ஆம் ஆண்டில் ஏமாற்றியதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பணத்தைப் பெற்ற பிறகு, அந்தக் குழு தங்கத்தை வழங்கத் தவறியதாகக் கூறப்படுகிறது, பின்னர் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மற்றொரு 50 கிலோ தங்க வியாபார நடவடிக்கையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினை மீண்டும் ஈடுபடுத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்ராவின் வெய்ஜா எஸ்.சி.சி பகுதியில் தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் ஒக்டோபர் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
தங்கம் என்று நம்பப்படும் இரண்டு மஞ்சள் நிற உலோகப் பொருட்களை அதிகாரிகள் மீட்டனர், அவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க ஆய்வக சோதனைகள் நடந்து வருகின்றன.
குற்றம் செய்ய சதி செய்தல், பொய்யான பாசாங்கு மூலம் மோசடி செய்தல் மற்றும் மோசடி முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் 11 பேரின் மீதும் சுமத்தப்பட்டுள்ளன.
அவர்கள் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர், என அந்நாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.
