காத்தான்குடியில் வடிகானை இரவோடு இரவாக சட்டவிரோதமாக உடைக்கும் முயற்சி!
புதிய காத்தான்குடி மத்திய வீதியில் புதிதாக கட்டப்பட்ட வடிகானை, நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11.00 மணியளவில், இரவோடு இரவாக சட்டவிரோதமாக உடைத்து, கழிவுநீர் அனுப்ப இரும்புக் குழாய் பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிரதேச மக்களின் தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பொலிஸார் வந்ததும், சம்பந்தப்பட்டவர்கள் முயற்சியை இடைநிறுத்தி விட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
முறையான அனுமதி இன்றி சட்டவிரோதமாக வடிகானை உடைத்து, கழிவுநீர் அனுப்ப பொருத்தத் திட்டமிட்டு வைத்திருந்த 5 இரும்புக் குழாய்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
