காதல் தோல்விக்கு விடுமுறை

இந்தியாவின் குருகிராம் நகரைச் சேர்ந்த ‘நொட் டேட்டிங்’ (Knot Dating) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தனது ஊழியர் ஒருவர் காதல் தோல்வி காரணமாக விடுமுறை கேட்ட நிலையில், உடனே அவருக்கு விடுமுறை வழங்கியமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த வெளிப்படையான விடுமுறை கடிதம், Gen Z எனப்படும் இளைய தலைமுறை ஊழியர்கள் பணிச்சூழலில் கொண்டு வரும் மாற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜஸ்வீர் சிங் என்பவர் தனக்கு வந்த மின்னஞ்சல் கடிதத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், இந்த விண்ணப்பம்தான் தான் பெற்றதிலேயே மிகவும் நேர்மையான விடுமுறை கடிதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட ஊழியர், ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை விடுமுறை கோரி அனுப்பிய மின்னஞ்சலில், எந்தவித வழக்கமான தனிப்பட்ட அவசரம் அல்லது உடல்நலக் குறைவு போன்ற காரணங்களையும் குறிப்பிடவில்லை.

அந்த மின்னஞ்சலில், “எனக்குச் சமீபத்தில் காதல் தோல்வி ஏற்பட்டது. அதனால் வேலையில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. எனக்கு சிறிய இடைவெளி தேவை. இன்று வீட்டில் இருந்து வேலை செய்கிறேன்” என்று வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.

ஊழியரின் இந்த நேரடியான விண்ணப்பத்தைப் பார்த்த நிர்வாகி மறுப்பு தெரிவிக்காமல் உடனடியாக விடுமுறைக்கு அனுமதித்துள்ளார்.

அந்த மின்னஞ்சலின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து அவர், “Gen Z தலைமுறையினர் எதிலும் ஒளிவு மறைவு வைப்பதில்லை என பாராட்டி உள்ளார்.

மேலும், நான் பெற்றதிலேயே இதுதான் மிக நேர்மையான விடுப்புக் கடிதம்” என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த சம்பவம், இன்றைய பணிச்சூழல் கலாச்சாரம் எவ்வாறு மாறி வருகிறது என்பதை எடுத்துக் காட்டுவதாகவும் தெரவிக்கப்படுகின்றது.