காதலை ஏற்க மறுத்த முன்னாள் இராணுவ சிப்பாயான யுவதி : அடித்துக்கொன்ற இளைஞன்!

தனது காதலை ஏற்க மறுத்த 23 வயது யுவதியை அடித்து கொலை செய்த பாண் விற்பனை செய்யும் இளைஞரை இரத்தினபுரி சிறிபாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் இராணுவ சிப்பாயான எம். அஹிம்சா சமன்மாலி (வயது 23) என்ற யுவதியே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலிமலே வெலேகொட வீதியில் கடந்த 04 ம் திகதி காலை 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாண் விற்பனை செய்யும் இளைஞரொருவர் குறித்த முன்னாள் இராணுவ சிப்பாயான யுவதியை காதலித்து வந்த நிலையில் குறித்த யுவதி இளைஞனின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த இளைஞன் தடியொன்றினால் யுவதியின் தலை மற்றும் உடம்பில் கடுமையாக அடித்து தாக்கியுள்ளார்.

இதனையடுத்து யுவதி இரத்தக் காயங்களுடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.