
காதலுக்காக ரூ.2400 கோடியை தியாகம் செய்த இளம்பெண்
மலேசியாவைச் சேர்ந்த ஏஞ்சலின் பிரான்சிஸ் என்ற பெண் ரூ.2400 கோடி குடும்ப சொத்துக்களை தியாகம் செய்து இருக்கிறார். இந்த பெண்ணின் தந்தை கு-கே-பெங் என்பவர் மலேசியாவில் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். இந்த பெண்ணின் தாயார் பௌலின் சாய், இளமை காலத்தில் மலேசியாவின் அழகி என்ற பட்டத்தை வென்றவர்.
ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் பாரம்பரிய பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவரான ஏஞ்சலின் பிரான்சிஸ், இதையெல்லாம் கடந்து சாதாரண மனிதரை காதலித்தார். இந்தப் பெண்ணின் காதலன் பெயர் ஜெடையா ஆகும். இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த போது ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி, காதலிக்க தொடங்கியுள்ளார்கள்.
இந்த காதல் குறித்து தன்னுடைய பெற்றோரிடம் ஏஞ்சலின் பிரான்சிஸ் கூறிய போது அவர்கள் பலத்த எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பாக பொருளாதார ரீதியாக பொருந்தாத காதல் இதுவென்று அவர்கள் சுட்டிக்காட்டினர். ஏஞ்சலின் பிரான்சிஸ் தனது காதலில் விடாப்படியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார். ஏஞ்சலின் பிரான்சிஸ்க்கு அவரது குடும்பத்தில் இருந்து ரூ.2484 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கிடைக்க இருந்ததாம். தொடர்ந்து வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டால் இந்த சொத்துக்களை அடைவதுடன், தொழில்களையும் கவனித்துக் கொள்ளலாம் என்ற சூழல் இருந்திருக்கிறது.
காதலுக்காக இவை அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு, தான் விரும்பியபடியே ஜெடையாவை ஏஞ்சலின் பிரான்சிஸ் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் அவரது பெற்றோர் வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னுடைய தந்தை தொழில்களை கவனித்துக் கொண்ட போது, குடும்பத் தலைவியாக இருந்து தன்னுடைய தாயார் வாழ்க்கையை எப்படி அற்புதமாக வழி நடத்தினார் என்று தமக்கு தெரியும் என்று ஏஞ்சலின் பிரான்சிஸ் வாதாடினார்.
இறுதியாக தன் காதலனுடேனேயே அவர் சென்று விட்டார். நம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத மாபெரும் சாம்ராஜ்யத்தை உதறி தள்ளிவிட்டு காதலனை இந்த இளம் பெண் கைபிடித்த நிகழ்வு தற்போது உலகெங்கிலும் விவாத பொருளாக மாறி வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
