
காதலனுடன் வாக்குவாதம் : ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த யுவதி!
புத்தளம் மாவட்டம் முந்தலம-நவடன்குளம பிரதேசத்தில், 20 வயது யுவதி ஒருவர், தனது காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாரவில தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த குறித்த யுவதி, சக ஊழியர் ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாக, பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த காதல் உறவு தொடர்பில் குடும்பத்தினருக்கும் தெரிந்திருந்தது என்றும், இருப்பினும் காதலர்கள் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்ந்து வாக்குவாதப்பட்டுக்கொண்டே இருப்பார்கள் எனவும், உயிரிழந்த யுவதியின் தாய் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், இன்றும் இதேபோன்று தொலைபேசியில் வாக்குவாதப்பட்ட யுவதி, அதன்பின், முகத்தை கழுவி விட்டு வருவதாக சொல்லிவிட்டு, வீட்டிற்கு வெளியே சென்று, ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக, உயிரிழந்த யுவதியின் தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
