காட்டிற்குள் வேட்டைக்கு சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு

முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் இன்று புதன் கிழமை அதிகாலை வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

ஆறுமுகத்தான் குளத்தினை சேர்ந்த துரைராசா ஆனந்தராசா (வயது – 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தண்ணிமுறிப்பு குளத்தினை அண்மித்த காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குறித்த நபர் காட்டிற்குள் பயன்படுத்திய சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் அவருடன் வேட்டைக்கு சென்றவர்களால் எடுத்து வரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது உயிரிழந்தவரின் சடலம் மற்றும் இவர் பயன்படுத்திய சட்டவிரோத துப்பாக்கி என்பன தண்ணிமுறிப்பு குளக்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.