காசா போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
எஞ்சியுள்ள அனைத்து பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், ஏற்றுக் கொள்ளக்கூடிய விதிமுறைகளின் கீழ் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
பரவலான சர்வதேச மற்றும் உள்நாட்டு எதிர்ப்பையும் மீறி, காசாவின் வடக்கு பகுதியில் பாரியளவிலான தாக்குதல் திட்டங்களுக்கு, தமது அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவின் வடக்கில் உள்ள பொது மக்களையும், சுகாதார அமைப்பினரையும் இடம்பெயருமாறு இஸ்ரேலிய படையினரால் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
60 நாள் போர் நிறுத்தத்துக்கு கட்டார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்ட நிலையில், நெதன்யாகு அதற்கு இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள காசா பிரிவின் தலைமையகத்துக்கு நேற்று இரவு விஜயம் மேற்கொண்ட பெஞ்சமின் நெதன்யாகு காணொளி அறிக்கை ஊடாக, தங்களது அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார்.