காசா நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரின் பக்கநிகழ்வாக நடைபெற்ற அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாஸிம் அல்-தானி பங்கேற்றுள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காசா தொடர்பான இராஜதந்திர முயற்சிகள், பிராந்திய பாதுகாப்பு மற்றும் போர் நிறுத்தத்தை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கட்டார் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐ.நா. பொதுச் சபையின் 81ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி தலைமையிலான குழு நியூயோர்க் சென்றுள்ளது. அவர் பொதுச் சபையின் ஆரம்ப அமர்வில் செப்டம்பர் 22ஆம் திகதி உரையாற்ற உள்ளதாக கட்டார் அமீரக அலுவலகம் தெரிவித்துள்ளது.
காசாவில் நிலவும் மனிதாபிமான நிலைமை மற்றும் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றம் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.










