களுவாஞ்சிகுடியில் கரையோர டெங்கு ஒழிப்பு முன்னெடுப்பு
-கல்முனை நிருபர்-
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணணின் வழிகாட்டலில் மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலான பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இன்று ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு தொடக்கம் குருக்கள்மடம் வரையிலான கரை ஓரங்களில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் மாபெரும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வு பெரியகல்லாறு வைத்தியசாலையில் களுவாஞ்சிகடி பிராந்திய பதில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சஞ்சய் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி, விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி, இராணுவத்தினர், பிரதேசசபை செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாகங்கள், விளையாட்டுக்கழகங்கள், பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாட்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேத்தாதீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருஐக்கள்மடம் ஆகிய கரையோரப்பிரதேசங்களில் குவிந்து கிடக்கம் பிளாஸ்டிப் பொருட்கள் மற்றும் டெங்கு நுளம்பு பெருகக்கூடியதான இடங்கள் இனங்காணப்பட்டு துப்பரவு செய்யப்பட்டன.