களுத்துறை சிறுமி வழக்கின் பிரதான சந்தேக நபர் செய்த மோசடி

களுத்துறையில் ஹோட்டல் கட்டிடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் வாகன மோசடி தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

யக்கல பிரதேசத்தில் வாகனங்கள் வாடகைக்கு வழங்கப்படும் இடத்தில் இருந்து சந்தேகநபர் கடந்த பெப்ரவரி மாதம் வெள்ளை நிற அக்வா ரக காரை வாடகை அடிப்படையில் எடுத்துச்சென்று வயங்கொடை பகுதியில் அமைந்துள்ள கார் விற்பனை நிலையத்திற்கு குறித்த காரை மோசடியான முறையில் விற்பனை செய்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்காக நீண்ட காலமாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாகியிருந்துள்ளார்.

இந்நிலையில், களுத்துறை பிரதேசத்தில் 16 வயது பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர், வாகன மோசடி தொடர்பில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்